Wednesday, December 27, 2017

தீ!


சின்னவர் முதலாம் ஆண்டு படிக்கும் போது ஓர் நாள் - பரீட்சைக்குத் தயாராகுவதாகச் சொல்லி ஒரு கொப்பியை எடுத்து சத்தமாகப் படிக்க ஆரம்பித்தார்.

அவர் படிக்க ஆரம்பித்தால் கேள்வியையும் சேர்த்துப் படித்துத் தான் மனனம் செய்வார்.

தொடர்பு படுத்துக... 
தூல... கிணறு
தூல... கிணறு
தூல... கிணறு

"என்னடா அது?" வாங்கிப் படித்தேன். அங்கு துலா இல்லை; தூல தான் இருந்தது. முன்பின்னாக மாற்றி எழுதியிருந்தார்.

அடுத்த வரி ஆரம்பம்...
நெருப்பு... தீட்டுபட்டி...
நெருப்பு... தீட்டுபட்டி... 
நெருப்பு... தீட்டுபட்டி... 

கொப்பியைப் பிடுங்கிப் பார்த்தேன். இப்படித் தான் இருந்தது.
"ஆசிரியை கரும்பலகையில் அப்படித்தான் எழுதினார்," என்றார் சின்னவர். திருத்திச் சொல்லிக் கொடுத்தேன்.

மூன்று வருடங்கள் கழித்து அதே பாடசாலைக்கு மாற்றலாகிப் போனபின் ஓர் நாள் - தற்செயலாக அந்த ஆசிரியையின் வகுப்பறைக்குள் நுழைந்தேன். கரும்பலகையில் அதே... தீட்டுபட்டி என்னை வரவேற்றது. ;) ஆசிரியையின் எழுத்து உறுப்பாக இல்லை; 'ப்' பாதியில் நின்று 'ட்' ஆகத் தெரிந்தது. ' பெ' அதே போல... அரைகுறையாக எழுதி 'டுப' ஆகி இருந்தது. :-)
~~~~~~~~
கீழே பெட்டியிலுள்ளவை என்னவென்று ஊகிக்க முடிகிறதா?

இவையும் கிட்டத்தட்ட‌ தீப்பெட்டிகள் தான்.
வில்லைகள் பற்றி விஞ்ஞான பாடத்தில் படிக்கும் பொழுது வில்லையைக் காட்டி சருகுகளை எரித்திருக்கிறேன். நல்ல வேளை ஒரு பொழுதும் பெரு நெருப்பாகிப் பரவவில்லை.

இந்த வில்லை நெருப்பு யோசனையை, சுனாமியை மையமாக வைத்து வெளிவந்த தமிழ்ப் படம் ஒன்றில் பயன்படுத்தியிருந்தார்கள். படத்தின் தலைப்பு நினைவுக்கு வரவேயில்லை.

பழைய கற்கால மனிதன் கல்லைத் தட்டி நெருப்பு வர வைத்தான்.

மஓறிகள் இரண்டு கட்டைகளை உரசி தீ வர வைத்திருக்கிறார்கள். அவற்றில் ஒரு கட்டை கிட்டத்தட்ட 30 சென்ரிமீற்றர் அளவு நீளமாக வள்ளம் போன்று இருக்கும். இரண்டாவது நீளமாக, கூராக இருக்கும். 

வள்ளத்தின் பள்ள‌த்தில் நீண்ட‌ குச்சை செங்குத்தாக வைத்துப் பிடித்து உரச உரச வெப்பம் ஏறி, அது புகைய ஆரம்பிக்கும். அந்தச் சமயம் சருகுகளை அதன் மேல் போட மெதுவே தீ பற்றிக் கொள்ளும்.

இங்கு படத்திலுள்ளவற்றில் குச்சுகளை மத்தால் கடைவது போல‌ சுழற்ற‌ வேண்டும். மெதுவே புகைக்க‌ ஆரம்பிக்கும். 

மஓறிகள் இங்கு வந்த ஆரம்பத்தில் இருந்த பெரிய‌ பிரச்சினை தீ. குளிரைப் போக்க‌ வெப்பம் வேண்டும். தீ இல்லாமல் எப்படி! இங்கோ குளிர் ஈர‌ விறகுகளை வைத்துக் கொண்டு சமாளிக்க‌ வேண்டும். 

ஒரு தடவை இப்படி தீ மூட்டினால் பிறகு அதனை நாட்கணக்கில் தொடர்ந்து அணையாமல் வைத்திருக்கும் வேலை சின்னவர்களது.

Monday, January 30, 2017

வாழையடி, வாழை!!

வகுப்பு - அறை எண் 15
பாடம் - ஆங்கிலம்
தலைப்பு - கார்டூன் (கேலிச் சித்திரம் அல்ல - சித்திரக் கதை.)
அளவு - நான்கு சட்டங்கள்
இருக்க வேண்டியவை - close shot, long shot. wide shot, onomatopoeia, slang... இப்படியாக ஒரு லிஸ்ட் வெண்பலகையில் எழுதப்பட்டிருந்தது.

என் மாணவருக்கு உதவுவதோடு இடையில் வேறு சிலருக்கும் உதவுவேன். பாடத்தின் இரண்டாவது நாளன்று மற்றவர்கள் என்னதான் வரைகிறார்கள் என்று ஒரு சுற்றுப் போய் சித்திரங்களை எட்டிப் பார்த்தேன்.

இப்படி ஒரு மரம் கண்ணில் பட்டது.

"இது என்ன மரம்?" - நான்
"பனானா மிஸ்." என்றார் மாணவர் நிமிராமல்.
"எங்கே நிற்கிறது இந்த வாழை?"
"அந்தக் குரங்கின் வீட்டில்."
"அதைக் கேட்கவில்லை. இப்படி ஒரு வாழையை எங்கே கண்டீர்கள்?"

சற்று எச்சரிக்கையானார் சின்னவர்.
"Why Miss? Don't they look like all the other trees!!"
என்ன செய்வது!!!
"Shall we google!" என்றேன்.
~~~~~~
இங்கு வாழை ஒரு அழகுத் தாவரம். வெகு சில வீடுகளில் மட்டும் காணலாம். அவையும் உண்ணக் கூடிய கனிகளைக் கொடுப்பதில்லை.


 என் வீட்டிலிருப்பவை பூ & காய்களைச் சமைப்பதற்காகவும் இலைகளுக்காகவும் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் இலைகள் காற்றில் கிழிந்து நார்நார் ஆகிவிடுகின்றன. அல்லது பக்கத்து வீட்டு 'கரக்கா' மரத்து வாசிகள் கழிப்பிடங்கள் ஆகிவிடுகின்றன. ;-(

இவை முற்றும் முன், முன்பனி ஆரம்பித்துவிடும். பஜ்ஜி, கறி, பொரியலுக்குத்தான் ஆகும். பெரும்பாலும் ஒரே நாளில் அனைத்தையும் சுத்தம் செய்து நறுக்கி, பொரித்து ஃப்ரீஸரில் போட்டு வைப்பேன்.

Monday, November 17, 2014

சங்கிலிக் கூவல்!

சகோதரர் பாண்டியன், இந்தத் தொடருக்கான அவரது இடுகையில் //நமது தேசம் பற்றிய உங்கள் சிந்தனைகளை அறிவதற்கு// என்று ஒரு வார்த்தை குறிப்பிட்டு என்னையும் தொடர அழைத்திருந்தார். இந்தியாவில் நான் தங்கியிருந்த இருபது நாட்களில் கிடைத்த அனுபவங்களை இரைமீட்டு, பதில் சொல்லியிருக்கிறேன். பதில்களை //சிந்தனைக்கான தூண்டுகோலாக //  மட்டும் எடுத்துக்கொள்க. யாரையும் நோகடிக்கும் நோக்கம் எனக்கில்லை.

1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?
இந்து மகா சமுத்திரத்தில் - கடல்வாழ் ஜீவராசியாக.
முதலில் நீந்திப் போய் திருகோணமலைக் கடலுக்கடியில் இருக்கும் பழைய கோணேசர் கோவிலைத் தேடிப் பிடித்து சுற்றிப் பார்க்க வேண்டும். பிறகு... ஒவ்வொரு இடமாக மீதி உலகைச் சமுத்திரப் பரப்பில் சுற்றுவேன். பவளப்பாறைகள் நடுவே சென்று வாழவும் ஆசை.

2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?
ம்... நடக்கும் காரியமா இது!
சோனியா காந்தி, பிறப்பால் இத்தாலியரானாலும் அவர் கணவர் இந்தியர். இவரும் ஆடை, பழக்கவழக்கம், சிந்தனை என்று இந்தியராகவே மாறிப் போனவர். அவரே இதுவரை அந்த நாற்காலியில் அமரவில்லை.
நான் மட்டும் எப்படி! சட்டப்படியும் இயலாது; சமுதாயப்படியும் ஏற்புடையதாக இராது. :-)

3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?
தெரிவித்தால் என்ன தெரிவித்தால்! ;) ஒருவேளை இரண்டு வேளை மட்டுமல்ல. 100% எதிர்ப்பு வரும். இந்தியர்கள் மட்டுமல்லாமல் இலங்கையரிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பும். :-) தன் கண்ணிலுள்ள துரும்பை எடுக்கவே வழியைக் காணோமாம். :-)

4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?
 1. அவர்கள் சுதந்திரத்தில் யாரும் தலையிடக் கூடாது. kidsline போல elderlyline கொண்டுவருவேன். வீட்டார் துன்புறுத்தல் மட்டுமல்லாமல் வேறு என்ன மன உளைச்சல் ஏற்பட்டாலும் உடனே தொலைபேசி வழியே உதவி கிடைப்பது போல ஒரு திட்டம் வரும்.
2. மூத்தவர்களது சொத்து அவர்கள் இயற்கையாக மரணமடைந்தாலன்றி  பிள்ளைகளைப் போய்ச் சேராது.

5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?
ஏனைய குடிமக்களைப் போலவே இவர்களும் நடாத்தப்படுவார்கள். மேலதிக சலுகைகள் எதுவுமே இராது.

6.மதிப்பெண் தவறென்று மேல்நீதிமன்றங்களுக்குப் போனால்..?
எனக்குத் தப்புத் தப்பாக மதிப்பெண்கள் வந்தால் கொதித்துப் போக மாட்டேனா! இது தனிமனித உரிமை. மீதி... சட்டத்தின் கையில்.

7.விஞ்ஞானிகளுக்கென்று ஏதாவது திட்டம்?
அவர்களது கண்டுபிடிப்புகளால் இயற்கைக்கோ மக்களுக்கோ பாதகமில்லை என்பதை நிச்சயித்ததன் பின்னால் தான் மீதி வேலைகளைத் தொடர அனுமதி கொடுக்கப்படும். கெடுபிடி நிச்சயம் அதிகமாக இருக்கும்.

8.இதை உங்களுக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் தொடர்வார்களா?
என் ஆட்சிக் காலத்திலேயே, 'இது நல்லது,' என்று அனைவரும் கண்டுணர்ந்திருக்க மாட்டார்களா!

9.மற்ற நாடுகளில் இல்லாத புதுமையாக ஏதாவது திட்டம்?
திட்டம்... இந்தியாவிற்குத் தானே கேட்கிறீர்கள்.
மற்ற நாடுகளில் இல்லாததைப் பற்றிப் பேசுமுன்... அங்கு இருப்பவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
1. சுவரொட்டிகளுக்கு முற்றாகத் தடை போடுவேன்.
 
2. தமிழை மென்று, கொன்று பெயர்ப் பலகைகள் வைத்திருப்போர்க்கு நிச்சயம் தண்டனை இருக்கும். ;) பத்திரிகைக்கு, 'பிழை திருத்துபவர்' என்று ஒருவர் இருப்பது போல, 'பெயர்ப்பலகைகள், பதாதைகள் செய்யும் தொழிலில் உள்ள நிறுவனங்களும் பிழை பார்ப்பவர் ஒருவரை நியமிப்பது கட்டாயம்,' என்னும் சட்டம் கொண்டுவரப்படும். ;)
 
3. 'இங்கு சிறுநீர் கழியாதீர்,' என்னும் வேண்டுகோள் எங்கெங்கெல்லாம் கண்ணில் படுகிறதோ அங்கெல்லாம் இருபாலார் பயன்பாட்டிற்குமான பொதுக் கழிப்பிடங்கள் அமைக்கப்படும். அதன் பின்னரும் நிலமையில் மாற்றம் இல்லாது போனால்.... என்ன செய்யலாம்!! ம்...! இங்கு கால்நடைப் பண்ணைகளிற் செய்வது போல... பிரச்சினையான இடங்களில் மறைவாக குறைந்த அளவு மின்சாரம் பாயும் கம்பிகள் பொருத்தப்படும். (என்னைத் திட்டாதீங்க யாரும். இந்தியப் பயணங்களின் போது பெரிதாக, மனதுக்கு உறுத்தலாகத் தெரிந்த விடயம் இது. கூடவே பெண்களைப் பற்றிய சிந்தனையும் வந்தது. அந்த வேண்டுகோள் பலகைகள் எதுவும் பெண்களை நோக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவாகப் புரிந்தது.)
4. சுவர்களில் அரசியல்வாதிகளின் படங்கள், பிரச்சார வார்த்தைகளுக்குத் தடை வரும்.
இன்னும் நிறைய இருக்கிறது.

இலங்கைக்கானால், இன்னும் சுவாரசியமாக வேறு விடயங்கள் சொல்லியிருப்பேன். ;))

10.மானிடப் பிறவி தவிர வேறென்ன பிறவி எடுக்க விரும்புகிறாய்?
டால்ஃபின்.
 
நீந்திப் போய் திருகோணமலைக் கடலுக்கடியில் இருக்கும் பழைய கோணேசர் கோவிலைத் தேடிப் பிடித்து சுற்றிப் பார்க்க வேண்டுமே!. ;)
~~~~~~~~~
இப்போ ஒரு முக்கியமான தகவல்....
குக்...
    குக்...
          கூ...
                இங்கு கூவும் கீவி யாரெனத் தெரிகிறதா!

Friday, November 14, 2014

மோவா

பறக்காத பறவை மோவா (moa).

மனிதர்கள் நியூஸிலாந்தில் நுழையும் முன்பு வரை சுதந்திரமாக... ஒரே ஒரு இனக் கழுகினைத் தவிர வேறு எவற்றுக்கும் பயப்படாமல் வாழ்ந்த ராட்சத பறவையினம் இது.

இந்த இனத்தில் பல உபபிரிவுகள் இருந்திருக்கின்றன. மிகக் குள்ளமானது, ஒரு வான்கோழியை விடச் சிறிது உயரம் குறைந்ததாகவும் அதி உயரமானது... அதன் கழுத்து மட்டத்தில் மனிதனின் உயரத்தைவிடவும் உயரமானதாகவும் இருந்திருக்கின்றது. 

பறவை - பறக்கக் கூடியது. காரணப் பெயர் இது. பறக்க இயலாத பறவைகளுக்கும் கூட அவற்றின் நெஞ்சுக் கூட்டுடன் இணைந்ததாக இறக்கை எலும்பு ஒரு சிறிய அடையாளமாகவாவது இருந்திருக்குமாம். ஆனால் மோவா இதற்கு விதிவிலக்கு. இதுவரை கண்டெடுக்கப்பட்ட மோவா உயிர்ச்சுவடுகள் எவற்றிலுமே இறக்கை எலும்புகள் காணப்படவில்லை என்கிறார்கள்.

முதல் மஓறி வந்து இறங்கிய சமயம் பெயரில்லாத இந்த நாட்டில்... காட்டில்... பரவலாகக் காணப்பட்ட இப் பறவைகள் அவர்களுக்கு இரையாகின. இவற்றின் அளவினாலும் பறக்க இயலாத தன்மையினாலும் தப்பிப் பிழைக்க இயலாத நிலைக்கு ஆளாயின. ஒரு மோவாவைக் கொன்றால் ஒரு முழு சமுதாயத்திற்கும் போதுமான உணவு கிடைக்கும். பலசமயம் தேவைக்கு மிஞ்சிப் போய் வீணாவதுவும் நடக்கும்.

காடுகளும் மெதுவே அழிக்கப்பட... முதல் முதலில் இங்கு வந்திறங்கிய ஐரோப்பிய மக்கள் மோவாவை நேரில் காணும் சாத்தியமே இல்லாமல் போயிற்று.
தொல்பொருட்காட்சிச்சாலை ஒன்றில் மீள உருவாக்கி வைக்கப்பட்டிருக்கும் மோவா ஒன்று.

Tuesday, November 11, 2014

டொட்டாரா

Totara - அதுதான் படத்தில் தெரியும் செடியின் பெயர். தாவரவியற் பெயர்... Podocarpus totara.

என் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் செடிக்கு ஒரு வரலாறு உண்டு. :-) ஆரம்பத்தில் வாடகை வீடுகளில் மாறி மாறிக் குடியிருக்க, ஒவ்வொரு வீட்டின் நினைவாகவும் ஒன்றிரண்டு செடிகளை எடுத்துப் போவேன். அப்படி என்னோடு வந்த செடிதான் இது.

களையாக, முதல் இலை தெரிந்த நாள் முதல் கவனித்து வந்து, பிறகு ஒரு நாள் சின்னதாக ஒரு தொட்டியில் மாற்றி நட்டு வைத்தேன். மெதுவே வளர்ந்தது. ஆரம்பத்தில் மேசை மேல் அலங்காரமாக உட்கார்ந்திருந்தது. இதோ இங்கு மழைக் குளியலில் அழகாக...

எங்கள் குழந்தை போல எங்களோடு இந்த வீட்டிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்தச் செடிக்கு வயது பன்னிரண்டு. தரையில் விட்டு வைக்க இயலாது; அதன் இயல்புக்கேற்ப வளர்ந்து வைக்கும். பிறகு வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். இப்போது சற்றுப் பெரிதாக ஒரு தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இரண்டரை மீட்டர் வளர்ந்திருக்கிறார்.

டொட்டாரா பற்றி -
நியூஸிலாந்துக்கே உரிய தாவரம். சின்னச் சின்ன முட்கள் போன்ற கூரிய இலைகளும் சின்னதாக சிவப்பு பழங்களும் கொண்டது. இதன் பழங்கள் பறவைகளுக்கு மிகப் பிரியமான உணவு.  மரம் மட்டும் பெரிதாக வளரும். முப்பது மீட்டர் வரை வளரக் கூடும். இங்குள்ள இரண்டு தீவுகளிலும் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்கிறது.
உக்கிப் போகாதிருப்பதும் சுலபமாகக் குடைத்து எடுக்க முடிவதும் இந்த மரத்தின் சிறப்பு. ஆரம்ப காலத்திலிருந்து மஓறி மக்கள் அவர்களது ஃபாறே (whare) கட்டுவதற்கு இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முழு டொட்டாராவிலிருந்து அவர்களது போர்க்கலம் ஒன்றை, ஒட்டுகள் எதுவும் இல்லாமல் குடைந்து எடுப்பார்கள். மரம் உரித்து விடும் பட்டைகளைப் பயன்படுத்தி அவர்களது ஃபாறே கூரைகளையும் சுவர்களையும் அழகு செய்வார்கள்.

ஐரோப்பியர் இங்கு வந்த பின்னால் டொட்டாரா மரம் புகையிரதப் பாதைகளில் ஸ்லீப்பர் கட்டையாகவும், தந்திக் கம்பமாகவும், வேலி அமைக்கவும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது.

Saturday, June 14, 2014

Kia ora

வருகை புரிந்த அனைவர்க்கும்... Kia ora.
இன்று முதல் இங்கே கீவியொன்று கூவும்.

கீவி உண்மையில் எப்பிடிக் கத்தும் தெரியுமா! கேட்க விருப்பமா!

இங்க நுழைந்து பாருங்கள். ப்ரௌண் கீவியில் ஆண், பெண் கீவிகளின் கூவல், ஆண் புள்ளிக் கீவி கூவல் மட்டுமல்லாமல் வெக்கா, பொசம், மோபோக், நீளவால் குக்கூ எல்லாச் சத்தமும் கேட்கலாம்.

இவையெல்லாம் என்னவென்று கேட்கத் தோன்றுகிறதா! பொசம் - கீரிப்பிள்ளை போன்றதொன்று. மீதி மூன்றும் பறவைகள். இன்னொரு சமயம் விபரமாகச் சொல்கிறேன்.
இனி... புனிதா பற்றி....

நான்... புனிதா. வலையுலகிற்குப் புதியவள்... அல்ல. ஏற்கனவே சிலரது வலைப்பூக்களைப் பின்தொடர்கிறேன். சிலர் வலைப்பூக்களில் என் கருத்துக்களைப் பார்த்திருப்பீர்கள்.

இப்போது அவசரமாக ஒரு வலைப்பூ ஆரம்பிக்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பித்தேன். இன்னும் ஒரு மாதம் செல்ல வலைப்பூ அமைப்பில் மாற்றம் வரும். அதுவரை மட்டுமே பறக்க இயலாத இந்தக் கீவியின் வலைப்பூ முகப்பில், வான் தொடப் பறக்கும் பறவைகளைக் காண்பீர்கள்.

இங்கு என்னவெல்லாம் பகிர்வது என்பதுபற்றி யோசித்து வைத்திருக்கிறேன்.
1. கீவியானா
2. கீவியானா
3. கீவியானா

அப்படியானால்!!!!

பொறுங்கள், இரண்டொரு நாட்களில் சொல்லுகிறேன்.

Ka kite anō
.
மீண்டும் சந்திப்போம்.