Tuesday, November 11, 2014

டொட்டாரா

Totara - அதுதான் படத்தில் தெரியும் செடியின் பெயர். தாவரவியற் பெயர்... Podocarpus totara.

என் தோட்டத்தில் வளர்ந்திருக்கும் செடிக்கு ஒரு வரலாறு உண்டு. :-) ஆரம்பத்தில் வாடகை வீடுகளில் மாறி மாறிக் குடியிருக்க, ஒவ்வொரு வீட்டின் நினைவாகவும் ஒன்றிரண்டு செடிகளை எடுத்துப் போவேன். அப்படி என்னோடு வந்த செடிதான் இது.

களையாக, முதல் இலை தெரிந்த நாள் முதல் கவனித்து வந்து, பிறகு ஒரு நாள் சின்னதாக ஒரு தொட்டியில் மாற்றி நட்டு வைத்தேன். மெதுவே வளர்ந்தது. ஆரம்பத்தில் மேசை மேல் அலங்காரமாக உட்கார்ந்திருந்தது. இதோ இங்கு மழைக் குளியலில் அழகாக...

எங்கள் குழந்தை போல எங்களோடு இந்த வீட்டிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இந்தச் செடிக்கு வயது பன்னிரண்டு. தரையில் விட்டு வைக்க இயலாது; அதன் இயல்புக்கேற்ப வளர்ந்து வைக்கும். பிறகு வெட்டுவதற்கு அனுமதி பெற வேண்டும். இப்போது சற்றுப் பெரிதாக ஒரு தொட்டி அமைத்துக் கொடுத்திருக்கிறோம். இரண்டரை மீட்டர் வளர்ந்திருக்கிறார்.

டொட்டாரா பற்றி -
நியூஸிலாந்துக்கே உரிய தாவரம். சின்னச் சின்ன முட்கள் போன்ற கூரிய இலைகளும் சின்னதாக சிவப்பு பழங்களும் கொண்டது. இதன் பழங்கள் பறவைகளுக்கு மிகப் பிரியமான உணவு.  மரம் மட்டும் பெரிதாக வளரும். முப்பது மீட்டர் வரை வளரக் கூடும். இங்குள்ள இரண்டு தீவுகளிலும் பரவலாக எல்லா இடங்களிலும் வளர்கிறது.
உக்கிப் போகாதிருப்பதும் சுலபமாகக் குடைத்து எடுக்க முடிவதும் இந்த மரத்தின் சிறப்பு. ஆரம்ப காலத்திலிருந்து மஓறி மக்கள் அவர்களது ஃபாறே (whare) கட்டுவதற்கு இவற்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு முழு டொட்டாராவிலிருந்து அவர்களது போர்க்கலம் ஒன்றை, ஒட்டுகள் எதுவும் இல்லாமல் குடைந்து எடுப்பார்கள். மரம் உரித்து விடும் பட்டைகளைப் பயன்படுத்தி அவர்களது ஃபாறே கூரைகளையும் சுவர்களையும் அழகு செய்வார்கள்.

ஐரோப்பியர் இங்கு வந்த பின்னால் டொட்டாரா மரம் புகையிரதப் பாதைகளில் ஸ்லீப்பர் கட்டையாகவும், தந்திக் கம்பமாகவும், வேலி அமைக்கவும் பயன்பட ஆரம்பித்திருக்கிறது.

4 comments:

  1. தொட்டியில் பெரிதா வளர வேர்கள் விட இடம் வேண்டாமோ. கடைசி பந்தியில் குறிப்பிட்ட விட்யம் உங்க பகிர்வின் மூலம் அறிந்து கொண்டேன். thanks.

    ReplyDelete
    Replies
    1. இப்ப பெரிய தொட்டி அடிச்சுக் கொடுத்திருக்கு ப்ரியா. :-)

      Delete
  2. :-) மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகத்திற்குவாழ்த்துகள்.

    ReplyDelete